சனி, ஏப்ரல் 12 || சுய பரிசோதனை மிகவும் தேவையாயிருக்கிறது
- Honey Drops for Every Soul
- 4 days ago
- 1 min read
வாசிக்க: 2 கொரிந்தியர் 13: 5-8
நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்; ... - 2 கொரிந்தியர் 13:5
நமக்கு விசுவாசம் இருக்கிறதா இல்லையா என்று நம்மை நாமே சோதித்தறியவேண்டும் என்று பவுல் இங்கே கூறுகிறார். ஏதாவது ஒரு வகையில் நாம் பாவம் செய்கிறோமா என்பதை அறிந்துகொள்ள நாம் அக்கறைகொள்ளவேண்டும். தாவீதுக்கு தன்னைப்பற்றி அறிந்துகொள்ள அக்கறை இருந்தது. தன்னை, தன் இருதயத்தை, தன் வழிகளை அவன் ஆராய்ந்தும், தனக்குத் தெரியாமல் ஏதாவது பொல்லாத வழிகள் தன்னில் இருக்கிறதா என்று அவனுக்கு அச்சம் இருந்தது. எனவே, தன்னை தேவன் ஆராய்ந்துபார்க்க அவன் விண்ணப்பித்தான். மறுபடி மறுபடி இந்த விண்ணப்பத்தை அவன் தன் சங்கீதங்களில் ஏறெடுக்கிறான் - தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும். (சங்கீதம் 139:23,24) கர்த்தாவே, என்னைப் பரீட்சித்து, என்னைச் சோதித்துப்பாரும்; என் உள்ளிந்திரியங்களையும் என் இருதயத்தையும் புடமிட்டுப்பாரும். (சங்கீதம் 26:2) தன்னில் தானே அறியாத தீய வழி ஏதும் உண்டா என்பதை அறிய அவன் பெரிதும் விரும்பினான்.
அன்பானவர்களே, நமக்கும் ஒரு மிக அவசிய வேலை ஒன்று உண்டு - நம் இருதயம் பாவத்திலிருந்து பரிசுத்தத்துக்கு மாறியிருக்கிறதா, அல்லது இன்னும் பாவத்தின் அதிகாரத்தில் இருக்கிறோமா என்று நம்மை பரிசோதித்தறியவேண்டும். ஒரு ஆசிரியர் ஒரு மாணவனிடம் ஏதாவது முன்னேற்றம் இருக்கிறதா என்று கேள்விகேட்பதுபோல, கிருபையில் வளர்ந்துள்ளோமா, அல்லது தேவனை விட்டு நாம் விலகிப்போனோமா என்ற கேள்வியை நம் இருதயத்திடம் கேட்கவேண்டும். அதற்கு நாம் சரியான பதிலைச் சொல்ல, கர்த்தரைப் பிரியப்படுத்தும்படி நாம் வாழும் ஆவலையும் பெலனையும் தரக்கூடிய கிருபையின் ஆவியானவரது வல்லமை நமக்குள் இருந்தால்தான் முடியும்.
ஜெபம்: ஆண்டவரே, நான் விசுவாசத்துடன் பரிசுத்தமாய் நடந்து, நீர் வெறுக்கும் காரியத்தை தள்ளுகிறேனா என்று என்னை ஆராய்ந்துபார்க்க நேரம் தருவேன். உம் ஆவியைத் துக்கப்படுத்தும் காரியத்தை எனக்குக் காண்பியும். அதை விட்டு, பாவத்தின் அதிகாரத்திலிருந்து விடுதலைபெற எனக்கு கிருபை தாரும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments