வாசிக்க: கொலோசெயர் 1: 3-8
நம் வாழ்வில் விசுவாசமும் அன்பும் இரண்டு தூண்கள்!
... இயேசுவின்மேலுள்ள உங்கள் விசுவாசத்தையும், பரிசுத்தவான்களெல்லார்மேலுமுள்ள ... அன்பையுங்குறித்து ... (கொலோசெயர் 1:3)
விசுவாசமும் அன்பும் கிறிஸ்தவ வாழ்க்கைக்குத் தேவையான இரண்டு தூண்கள்! கொலோசெயர் 1:3ல், பவுல் குறிப்பிடும் விசுவாசம் மற்றவர்கள்மேலோ, நமது திறமைகளின்மேலோ நாம் வைக்கும் நம்பிக்கையன்று. அது நமது ஆண்டவரும் இரட்சகருமான இயேசுகிறிஸ்துவின்மேல் நாம் வைக்கும் விசுவாசம். ஏன் நாம் அவரில் விசுவாசம் வைக்கிறோம்? முதலாவது அவர் தேவனுடைய குமாரனாயிருப்பதால் நமக்குத் தேவனோடு ஒரு தொடர்பை ஏற்படுத்துகிறார். இரண்டாவது. அவர் மூலமாகவே நாம் தேவனுடைய சுவீகாரப் புத்திரர்களாகிறோம். அவராலேயன்றி வேறெந்த வகையிலும் இந்த தகப்பன் பிள்ளை என்ற உறவு தேவனோடு நமக்கு கிடைக்காது. எனவேதான், இயேசுகிறிஸ்துவின்மேல் விசுவாசம் வைக்கும் ஒவ்வொரு விசுவாசிக்கும் கர்த்தருடைய உன்னத பிரசன்னம் மற்றும் அவரது ஆசீர்வாதங்களைப் பெறும்படியான சிலாக்கியம் கிடைக்கிறது. பிதாவாகிய தேவன் ஒவ்வொரு விசுவாசியின்மீதும் ஒரு தகப்பனைப்போன்று கரிசனை வைத்து, அவனைப் பராமரிப்பதோடு, அனுதினமும் தமது பிரசன்னத்தினால் அவனை மகிழ்ச்சிப்படுத்தி, அவன் சோதனைகளைச் சந்திக்கையில் அவனைத் திடப்படுத்தி வழிநடத்தி, அவனுக்கு வேண்டிய அனுதின பெலத்தை அருளுகிறார். பவுல் கூறும் இரண்டாவது
குணாதிசயமான அன்பும் இந்த உலகின் மக்கள் ஒருவர்மேல் ஒருவர் காட்டும் சாதாரணமான, நிலையற்ற அன்பல்ல! அது விசுவாசிகளுக்கிடையே காணப்படும் அசாதாரணமான அன்பு. ஏனெனில் இந்த அன்பு இயேசுகிறிஸ்துவின் ஈடு இணையற்ற அன்பினை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அவரது அன்பு மனுஷருக்காகத் தன் உயிரையே தியாகம் செய்த ஒப்பற்ற அன்பு. இந்த அன்பைக் காட்டிலும் சிறந்த அன்பு வேறெதுவும் இல்லை. எனவேதான் ஒரு விசுவாசி தன் வாழ்வை இயேசுவுக்கு அர்ப்பணிக்கும்போது, அவரைப்போலவே தானும் நேசிக்கத் தன்னை ஒப்புக்கொடுக்கிறான். மட்டுமல்ல! ஒரு விசுவாசியின் அன்பு, பரிசுத்த ஆவியானவரால் தூண்டிவிடப்படும் அன்பாயிருக்கிறது.
அன்பானவர்களே, இந்த இரண்டு தூண்களும் நம் வாழ்விலும் நிலையாய் இருக்கவேண்டும் என வாஞ்சித்து, ஆண்டவரிடம் கேட்டுப் பெற்றுக்கொள்வோம்.
ஜெபம்: ஆண்டவரே, கடினமான சூழ்நிலைகளிலும் உம்மை விசுவாசிக்க எனக்கு உதவி செய்யும். மற்ற விசுவாசிகளை நேசிப்பது கடினமாயிருந்தாலும் இயேசு எனக்காக ஜீவனைக் கொடுத்த அன்பை நினைத்து அதேபோன்ற அன்பைச் சொரிய உமது அரிய கிருபையைத் தாரும். ஆமென்.
அன்பானவர்களே
இந்த மாதம் நம் சங்கிலித்தொடர் ஜெபம் நடைபெறும். அது அக்டோபர் 28ம் தேதி திங்கள் மதியம் 12 மணிக்கு தொடங்கி அக்டோபர் 29ம் தேதி செவ்வாய் மதியம் 12 மணியில் முடிகிறது. நம் இருதயங்களை ஜெபத்தில் ஒன்றாக இணைத்து, இந்த ஊழியத்துக்காகவும், நமது தேசத்துக்காவும் மற்ற பல காரியங்களுக்காகவும் ஜெபிப்போமாக. உங்கள் பெயர்களை வாட்ஸ் ஆப் மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ எங்களுக்குத் தெரிவிக்கலாம். நீங்கள் எந்த அரை மணி நேரத்தை ஜெபத்திற்கு தெரிந்து கொண்டீர்கள் என்பதையும் தெரிவிக்கவும். நன்றி.
அலுவலக தொடர்பு எண் - 9444456177.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
கிறிஸ்துவின் பணியில் உங்கள் அன்பான,
சகோ. சாமுவேல் பிரேம்ராஜ், சகோதரி மஞ்சுளா பிரேம்ராஜ்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Commentaires