சனி, அக்டோபர் 19 வாசிக்க: மத்தேயு 4:23,24; 9:35,36
- Honey Drops for Every Soul
- Oct 19, 2024
- 2 min read
உங்களுக்கு சுகம் வேண்டுமா?
நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு,.. ஜெபம் பண்ணுங்கள்... - யாக்கோபு 5:16
கர்த்தர் இன்று சுகப்படுத்துவாரா? ஆம், எந்த சந்தேகமும் வேண்டாம். நான்கு சுவிசேஷங்களும்,

வேதனையிலுள்ள மக்களைக் கண்டு, அவர்கள் கூக்குரலைக்கேட்டு இயேசு மனதுருக்கத்தினால் நிறைந்தவராகி அவர்களை அவர்களது பிரச்சனைகளிலிருந்து விடுதலையாக்கினார் என்று விவரிக்கின்றன. இன்றும் நாம் அவரை நோக்கிக் கூப்பிடும்போது நம்மையும் அவர் குணமாக்குகிறார். ஆனால் நாம் குணம் பெறுவதற்கு சில நிபந்தனைகளும் உண்டு. முதலாவது, நமக்கு விசுவாசம் வேண்டும். இரண்டாவது, மற்றவர்கள்மேல் நமக்கு மனத்தாங்கல் இருந்தால் அவர்களை மன்னிக்கவேண்டும். மாற்கு 11:23-25ல் ஆண்டவர் இயேசு, மலையைப் பார்த்து பெயர்ந்துபோய் கடலில் விழு என்று விசுவாசத்தோடு சொன்னால் அது அப்படியே நடக்கும் என்று கூறினார். நீங்கள் ஜெபத்தில் எவற்றைக் கேட்டுக்கொள்ளுகிறீர்களோ அவற்றைப் பெற்றுக்கொள்வோம் என விசுவாசிக்கவேண்டும் என்று அவர் கூறினார். அதோடு விட்டுவிடாமல், நீங்கள் நின்று ஜெபம் பண்ணும்போது ஒருவன் பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள் என்றும் கூறினார்.
அன்பானவர்களே, இன்று நீங்கள் சுகம்பெற வேண்டுமா. உற்சாகமடையுங்கள்; அற்புத சுகம் உங்களுக்கு மிக அருகில் உள்ளது. உங்களுக்கு யார் பேரிலாவது மனக் கசப்பு இருக்குமானால் அவர்களை மனப்பூர்வமாய் மன்னித்துவிட்டு, இயேசுவின்மேல் பூரண நம்பிக்கை வையுங்கள். அவரால் கூடாத காரியம் ஒன்றுமில்லை என்று நம்பி, சோர்ந்துவிடாமல் விசுவாசத்துடன் ஜெபியுங்கள். அவர் இன்றும் அற்புதம் செய்கிறவர். உங்கள் சூழ்நிலைகளை மாற்றி உங்களை அதிசயங்களைக் காணச்செய்வார். நீங்கள் ஒரு அற்புதத்தை அனுபவிப்பீர்கள்.
ஜெபம்: தேவனே, மற்றவர்களை முழுமனதுடன் மன்னித்து, சிறிதளவு விசுவாசம் எனக்குள் இருந்தாலும் அதை நான் விட்டுவிடாமல் உம்மைப் பற்றிக் கொண்டு, நீர் என்னை நிச்சயம் குணமாக்குவீர் என்று நம்ப உதவி செய்யும். நீர் என்னைக் குணமாக்கிவிட்டீர் என்று நான் விசுவாச அறிக்கை செய்கிறேன். ஆமென்.
அன்பானவர்களே
இந்த மாதம் நம் சங்கிலித்தொடர் ஜெபம் நடைபெறும். அது அக்டோபர் 28ம் தேதி திங்கள் மதியம் 12 மணிக்கு தொடங்கி அக்டோபர் 29ம் தேதி செவ்வாய் மதியம் 12 மணியில் முடிகிறது. நம் இருதயங்களை ஜெபத்தில் ஒன்றாக இணைத்து, இந்த ஊழியத்துக்காகவும், நமது தேசத்துக்காவும் மற்ற பல காரியங்களுக்காகவும் ஜெபிப்போமாக. உங்கள் பெயர்களை வாட்ஸ் ஆப் மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ எங்களுக்குத் தெரிவிக்கலாம். நீங்கள் எந்த அரை மணி நேரத்தை ஜெபத்திற்கு தெரிந்து கொண்டீர்கள் என்பதையும் தெரிவிக்கவும். உங்களுக்கு ஜெபக்குறிப்புகள் அனுப்பி வைக்கப்படும். நன்றி . அலுவலக தொடர்பு எண் - 9444456177.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
கிறிஸ்துவின் பணியில் உங்கள் அன்பான,
சகோ. சாமுவேல் பிரேம்ராஜ், சகோதரி மஞ்சுளா பிரேம்ராஜ்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Commentaires