பாவத்தின் அகோரம், நியாயத்தீர்ப்பின் நிச்சயம்
லோத்து: அப்படியல்ல ஆண்டவரே, ... மலைக்கு ஓடிப்போக என்னால் முடியாது, ... நான் மரித்துப்போவேன் ... என்றான். - ஆதியாகமம் 19:18,19
சோதோமை அழிக்குமுன், லோத்தையும் அவன் குடும்பத்தையும் காக்க தேவன் தம் தூதர்களை அனுப்பினார். லோத்துவின் நீதியினால் தேவன் இதைச் செய்யாமல், ஆபிரகாமின்மேல் இருந்த அவரது மனதுருக்கத்தால் செய்தார். ஆதியாகமம் 18ல் ஆபிரகாம் சோதோமுக்காக மன்றாடி ஜெபித்தபடியால், ஆதியாகமம் 19:29, தேவன் ஆபிரகாமை நினைத்து, லோத்து குடியிருந்த பட்டணங்களைத் தாம் கவிழ்த்துப்போடுகையில், லோத்தை அந்த அழிவினின்று தப்பிப்போகும்படி அனுப்பிவிட்டார் என்கிறது. லோத்தின் குடும்பத்தை வெளியே கொண்டுவந்த பின்பு, ஜீவன் தப்ப அவனை மலைக்கு ஓடிப்போகச் சொன்னார் அவர். ஆனால் அவனோ, அப்படியல்ல ஆண்டவரே
உமது கண்களில் உமது அடியேனுக்கு கிருபை கிடைத்ததே! என் பிராணனைக் காக்கத் தேவரீர் ... கிருபையை பெரிதாக விளங்கப்பண்ணினீர்; மலைக்கு ஓடிப்போக என்னால் முடியாது, ... அதோ அந்த ஊர் இருக்கிறதே, ... என் பிராணன் பிழைக்க நான் அங்கே ஓடிப்போகட்டும் என்றான். லோத்துவின் இந்தத் துணிச்சல்மிக்க மறுமொழி நம்மைப் பிரமிக்க வைக்கிறது. தன் வாழ்வில் கர்த்தரின் சித்தத்தை ஏற்க அவனுக்கு விருப்பமில்லை, மாறாக பட்டண வாழ்க்கைமுறையை விரும்பினான்! தான் மலைக்கு ஓடினாலும் தன் ஜீவனைப் பாதுகாக்கும் சக்தி தேவனுக்கு உண்டு என்பதை சந்தேகித்தான்! நம்பமுடியாத வகையில், சோதோம்போல பாவத்தின் பட்டணமாயிருந்த சோவாருக்கு அனுப்பும்படி தேவனிடம் கேட்கக்கூடிய துணிச்சல் அவனுக்கிருந்தது!
அன்பானவர்களே, லோத்தினது வாழ்க்கை கீழ்நோக்கி இழுக்கப்படுவதை நம்மால் காணமுடிகிறது. முதலாவதாக, சோதோமை விட்டு வெளியேற லோத்து தயங்கினான். பிறகு, தூதர்களோடு அவன் தர்க்கித்து, தான் விரும்பும் வழியில் செல்லத் தன்னை அனுமதிக்கும்படி கெஞ்சினான். கர்த்தர் பாராட்டின இரக்கத்துக்கு நன்றியுடையவனாய் அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவேண்டிய லோத்து, அவர் வழி, அவர் சித்தத்துக்கு எதிராய் நின்றான். ஆனால் அவர் அவன் விருப்பத்துக்கு ஏற்ப பதில் கொடுத்தது மிகவும் வியப்பூட்டுகிறது! லோத்து சரீர மரணம் அடையாதபடி காக்கப்பட்டாலும், நித்திய நோக்கின்படி அவனது வாழ்க்கையும், அவனது குமாரத்திகளின் வாழ்க்கையும் வீணாயிற்று. அவர்களது பாவச் செயல் அவர்களை கர்த்தர் அருவருக்கின்ற அம்மோனியர், மோவாபியரின் தாயார்களாய் ஆக்கிற்று. லோத்து எல்லா விசுவாசிகளுக்கும் ஒரு எச்சரிக்கை! தேவனை நம்பாதிருக்க, சந்தேகிக்க, கீழ்ப்படியாதிருக்கக் கூடாது!
ஜெபம்: ஆண்டவரே, உலகப்பற்றால் செய்த சமரசங்கள் லோத்துவை வீழ்த்தியது. விசுவாசியாயிருந்தும், உம் ஆசீர்வாதங்களை அனுபவிக்கின்ற வாய்ப்பிருந்தும், அவனது தீமையான தேர்வினால் அழிவைச் சந்தித்தான். உலக சோதனைக்குள் நான் அமிழாமல் கவனமாயிருந்து பரலோக தரிசனத்தை காத்துக்கொள்வேன். ஆமென்.
அன்பானவர்களே
இந்த மாதம் நம் சங்கிலித்தொடர் ஜெபம் நடைபெறும். அது அக்டோபர் 28ம் தேதி திங்கள் மதியம் 12 மணிக்கு தொடங்கி அக்டோபர் 29ம் தேதி செவ்வாய் மதியம் 12 மணியில் முடிகிறது. நம் இருதயங்களை ஜெபத்தில் ஒன்றாக இணைத்து, இந்த ஊழியத்துக்காகவும், நமது தேசத்துக்காவும் மற்ற பல காரியங்களுக்காகவும் ஜெபிப்போமாக. உங்கள் பெயர்களை வாட்ஸ் ஆப் மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ எங்களுக்குத் தெரிவிக்கலாம். நீங்கள் எந்த அரை மணி நேரத்தை ஜெபத்திற்கு தெரிந்து கொண்டீர்கள் என்பதையும் தெரிவிக்கவும். உங்களுக்கு ஜெபக்குறிப்புகள் அனுப்பி வைக்கப்படும். நன்றி . அலுவலக தொடர்பு எண் - 9444456177.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
கிறிஸ்துவின் பணியில் உங்கள் அன்பான,
சகோ. சாமுவேல் பிரேம்ராஜ், சகோதரி மஞ்சுளா பிரேம்ராஜ்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comentários