வாய்ப்பேச்சில் மட்டுமல்ல, கிரியையிலும் காண்பியுங்கள்
என்னை ஆண்டவரே! ஆண்டவரே! என்று நீங்கள் சொல்லியும், நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்யாமற்போகிறதென்ன? - லூக்கா 6:46
கிறிஸ்தவர்களிடத்தில் பொதுவாகக் காணப்படும் பாவம் - விசுவாசத்தைப்பற்றிப் பேசுவது, ஆனால் நடைமுறையில் அதைச் செயல்படுத்தாதது! இயேசுவுக்குப் பின்சென்றவர்கள் அநேகர்; அவர்கள் ஆண்டவரே என்று கூப்பிட்டு அவரை மகிமைப்படுத்துவதுபோலக் காண்பித்தார்கள்; ஆனால், அவர் கட்டளைகளுக்குச் சிறிதும் கீழ்ப்படியவில்லை. இது ஆதித் திருச்சபையிலும் இருந்தது. எனவேதான் அப்போஸ்தலன் யாக்கோபு தன் நிருபத்தில், நீங்கள உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள் என்ற எச்சரிக்கையைக் கொடுக்கிறான். (யாக்கோபு 1:22) ஒன்றை நாம் மனதில் வைக்கவேண்டும் - நம் இருதயங்களில் பாவத்தை வைத்து, கிறிஸ்துவற்ற ஜீவியத்தை வாழ்ந்தோமானால், நமக்கு கிறிஸ்தவன் என்ற பெயரால் எந்த நன்மையும் இல்லை. தேவனுக்கு, அவர் வார்த்தைக்கு கீழ்ப்படிவதே நமது விசுவாசத்திற்கான ஒரே நிரூபணமாயிருக்கிறது; பரிசுத்த வாழ்க்கையற்ற வெறும் வாய்ப் பேச்சு ஒன்றுக்கும் உதவாது. விசுவாசமே கிறிஸ்தவ வாழ்வின் அடித்தளம், கீழ்ப்படிதலல்ல என்று நான் நினைத்தேன் என்று சிலர் சொல்லலாம். தமக்குக் கீழ்ப்படிவது அவரவர்களுடைய விருப்பத்தின்படி அல்ல என்று இங்கு இயேசு தெளிவாகக் கூறுகிறார். அவருக்குக் கீழ்ப்படிதல் கிறிஸ்தவ வாழ்விலே இன்றியமையாதது. மத்தேயு 7:21ல் பொய்யான பேச்சு ஆபத்தானது என்பதைக் காண்பிக்கும்படி, பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை என்று கூறினார் இயேசு. மேலும் பல உதாரணங்களைக் கூறினார் - தம் நாமத்தினால் நன்மையான காரியங்களைச் செய்த பலர், பரலோகத்தின் வாசலில் தடுத்து நிறுத்தப்பட்டதற்குக் காரணம் அவர்களது நீதியற்ற செயல்களே என்றார். இந்த மனுஷர் வெளியரங்கமாக நீதிமான்களைப் போலத் தோன்றினாலும், அவர்களது சுயநல நோக்கங்களும், தீமையான எண்ணங்களும் தேவனுக்கு நன்றாகத் தெரியும்.
அன்பானவர்களே, நான் ஒரு கிறிஸ்தவன். இயேசு எனது தேவனும் இரட்சகருமாய் இருக்கிறார் என நாம் சொல்லலாம். ஆனால் இயேசு நம்மிடம், உன் இருதயத்தை ஆராய்ந்து பார்! மெய்யாகவே நீ எனக்குக் கீழ்ப்படிய விரும்புகிறாயா? என் வார்த்தையின் வெளிச்சத்தில் உன் பாவங்களை நியாயந் தீர்க்கிறாயா? அல்லது எல்லாரும் செய்வது இதுதான் என்று கூறி உன்னை ஏமாற்றிக்கொள்கிறாயா என்கிறார். கிறிஸ்துவில் நமக்குள்ள விசுவாசம் உண்மையானதா போலியானதா என்று அறிய ஒரே ஒரு பரிசோதனை அவருக்குக் கீழ்ப்படிவதுதான்!
ஜெபம்: ஆண்டவரே, உமக்குக் கீழ்ப்படிந்திருக்கும்போது, உம்மை நேசிக்கிறேன், என்னில் அல்ல உம்மில் அதிக விசுவாசம் வைத்துள்ளேன் என்று காட்டுகிறேன். இயேசுவே ஆண்டவர் என உதட்டால் மட்டும் சொல்லாது, அவர் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து, வாழ்வில் சாட்சியாய் வாழ்ந்து அவரைப் பின்பற்றுவேன். ஆமென்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments