top of page

செவ்வாய், மார்ச் 11 || சுய வெறுப்பு - நம்மையே நாம் வெறுப்பது

வாசிக்க: லூக்கா 9: 23-25


ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.- லூக்கா 9: 23


இப்பகுதியில் இயேசு மூன்று அடிப்படைத் தகுதிகளைக் குறிப்பிடுகிறார் -

முதலாவது, சுயவெறுப்பு,

இரண்டாவது, சிலுவை சுமப்பது,

மூன்றாவது, அவரைப் பின்பற்றுவது


இந்த சுயவெறுப்பு பேசுவதற்கு எளிமையானது, ஆனால் அப்பியாசம்செய்வது மிகவும் கடினமானது. சுயவெறுப்பு என்பது, நம் வாழ்வின் சிம்மாசனத்தை நாம் விட்டிறங்கி, அங்கு கிறிஸ்துவை அமர்த்தவேண்டும். அப்படியானால், கிறிஸ்துவைப் பிரியப்படுத்தமுடியாதபடி தடையாய் நிற்கின்ற நம் சுயத்தின் விருப்பங்களை, ஆசைகளை மற்றும் செயல்பாடுகளை நாம் அகற்ற சம்மதிக்கவேண்டும். நம்முடைய சுய விருப்பங்களில் பெரும்பாலானவை நமக்கு நன்மையாகத் தோன்றக்கூடும். ஆனால், கிறிஸ்துவின்மேல் வைக்கும் நம்முடைய கவனத்தை அவைகள் திருப்பினால், அவற்றை நாம் விட்டுவிடவேண்டும். ஒருவேளை ஒலிம்பிக் பந்தயங்களில் கலந்துகொள்ளும் வீரர் ஒருவர் சுயவெறுப்பைப் பற்றி அதிகம் அறிந்திருப்பார். தங்கப் பதக்கத்தை வெல்ல என்ன விலை கொடுப்பீர்கள் என்று அவரை நாம் கேட்டால், பல வருட கால சுயவெறுப்புதான் என்று பதில் கூறுவார். போட்டியில் பரிசைப் பெற, அவருக்குப் பிரியமான உணவுகளை, குடும்ப நிகழ்ச்சிகளை, விருப்பமான காரியங்களை நிச்சயமாக அவர் ஒதுக்கியிருப்பார். இப்படிச் செய்தது நல்லது என்று நினைக்கிறீர்களா என்று கேட்டால், ஆமாம், நிச்சயமாக! என்று சொல்லுவார்.


அன்பானவர்களே, உலகம் பெருமதிப்பை அளிக்கின்ற போட்டியில் கலந்துகொள்ளுகின்ற நபர், தன் இலக்கை அடைய தடையாயிருக்கிற அனைத்துக் காரியங்களையும் வெறுத்துத் தள்ளுகிறார்; கிறிஸ்துவின் சீஷர்களான நாம் அவரை பின்பற்ற, அதைக்காட்டிலும் அதிக அர்ப்பணிப்புடன் செயல்படுகிறோமா? இத்தனை பெரிய விலை கொடுக்கவேண்டுமா? நான் இத்தனை அதிகமாய் விட்டுக்கொடுக்க வேண்டுமா? என்று நினைக்கலாம். நம் ஆண்டவர் நம்மை இரட்சிப்பதற்காக எவ்வளவு பெரிய தியாகத்தைச் செய்துள்ளார் என்று உணரும்போது, உடனே நாம், ஆண்டவரே எனக்காக எத்தனை அதிகமாய்ச் செய்திருக்கிறீரே! என்னிடம் உள்ளவை அனைத்தும் உமக்குத்தான்; அதற்கு மேலாகவும் உமக்குக் கொடுப்பேன் என்று நாம் சொல்வோம்.      
ஜெபம்:  ஆண்டவரே, என்னை இரட்சிக்க உம்மையே கொடுத்தபடியால், உமக்கு அனைத்தையும் - முழுமையாக என்னையும், என்னிடமுள்ளவைகளையும் - கொடுப்பேன். என் பாதையில் உமக்குப் பிரியமில்லாதவை இருப்பின், அவற்றை தள்ளி, சுயத்தை வெறுத்து, உம்மை முழுமனதுடன் பின்பற்றுவேன். ஆமென். 

 

தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page