செவ்வாய், மார்ச் 04 || தேவன் ஏன் நம்மைச் சிட்சிக்கிறார்?
- Honey Drops for Every Soul
- Mar 4
- 1 min read
வாசிக்க: எபிரெயர் 12: 5-11
... தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும்பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார்.
-எபிரெயர்12:10
தேவன் நம்மை ஏன் சிட்சிக்கிறார் என்று பலமுறை நாம் ஆச்சரியப்படுகிறோம். நம்மை இருளில் வைக்காமல், ஏன் அப்படி சிட்சிக்கிறார் என்று நமக்குச் சொல்லக்கூடாதா? முதலாவதாக, அவர் அப்படி விளக்கிச் சொன்னாலும் நம்மால் புரிந்துகொள்ள முடியாது. மேலும், அவர் நடத்தும் வழியை நாம் நிராகரிப்போம். ஆனாலும், தமது பிள்ளைகளைத் தேவன் சிட்சிப்பதற்கான மூன்று காரணங்களைக் கூறமுடியும். முதலில், நம்மை ஆயத்தப்படுத்தவே! நம் வாழ்வில் கர்த்தர் ஒரு விசேஷித்தவிதத்தில் கிரியைசெய்து ஒரு விசேஷித்த ஆசீர்வாதத்தைக் கொண்டுவர விரும்பி நம்மை அவர் ஆயத்தப்படுத்துகிறார். அது எப்படிப்பட்ட ஆசீர்வாதமாகவும் இருக்கலாம்; ஆனால் நாம் அதைப் பெற்றுக்கொண்டு அதற்காகக் கர்த்தரை மகிமைப்படுத்தவேண்டும். இரண்டாவதாக, சிட்சிப்பு நம்மைப் பூரணப்படுத்துவதற்கே! பூரணப்படுத்துதல் என்றால் நாம் எபபடியிருக்க வேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறாரோ அதற்காக நம்மை உருவாக்குகிறார். இதுதான் தேவனுடைய நித்தியமான நோக்கமாயிருக்கிறது. அவர் என்ன செய்கிறார் என்பது நமக்குத் தெரியாதிருந்தாலும் அவரை நாம் முற்றிலும் நம்பி, சிட்சையை ஏற்றுக்கொள்ளவேண்டும். மூன்றாவதாக, சிட்சையானது நம்மைச் சீர்திருத்துவதற்கே! நாம் தவறான பாதையில் போகிறோம் என்று நமக்கு உணர்த்தி, சரியான வழிக்குக் கொண்டுவரவே நம்மை சீர்திருத்துகிறார் அவர். இப்படிப்பட்ட அனுபவங்களிலே, நாம் பாவம் செய்துவிட்டோம் என்றுணர்ந்து கர்த்தர் நம்மை சிட்சிக்கும் நோக்கத்தை அறிந்துகொள்கிறோம்.
அன்பானவர்களே, எவ்வகை சிட்சைக்குள் போனாலும் அவரது பிள்ளைகளான நமக்குச் சிறப்பானவற்றைச் செய்கிறார் கர்த்தர் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அவர் நம்மை நேசிக்கிறார். உண்மையில், நம்மை நேசிக்கிறார் என்பதற்கான அத்தாட்சி அவரது சிட்சைதான்! எனவே, சிட்சையை எதிர்த்து, ஆண்டவரை வெறுக்காமல், அவருக்கு நம்மை முழுமையாக சமர்ப்பிப்போம்; அப்போது அவர் விரும்பும் வழிகளிலே நம்மை உருவாக்கி, பூரணத்துக்கு நேராக நடத்துவார்.
ஜெபம்: ஆண்டவரே, வாழ்விலே கடினமான பாதையில் நடக்க நேரிட்டாலும், நீரே கடினங்களை அனுமதித்து, ஒரு உன்னத நோக்கத்துக்காகவே என்னைச் சிட்சிக்கிறீர், அல்லது பரிசுத்தத்தில் என்னைப் பூரணமாக்க, அல்லது தவறான பாதையிலிருக்கும் என்னைச் சீர்திருத்தவே என்று உணர உதவும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments