வாசிக்க: அப்போஸ்தலர் 2:1-4
ஒற்றுமையாயிருங்கள்! பலப்படுங்கள்!
சபை கூடிவருதலை... விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்...
- எபிரெயர் 10:25
கொய்னோனியா என்றால் ஐக்கியம் என்று அர்த்தம். அதுவே கிறிஸ்தவத்தின் சாராம்சம்! 1 கொரிந்தியர் 1:9, இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர் என்று கூறுகிறது. ஆம்! நாம் ஐக்கியமாயிருப்பதற்கு அழைக்கப்பட்டிருக்கிறோம். முதலாவது, நாம் திரித்துவ தேவனோடு ஐக்கியமாயிருக்க வேண்டும். 1 யோவான் 1:3, எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது என்று கூறுகிறது. 2 கொரிந்தியர் 13:14ல், பரிசுத்த ஆவியோடும் நமக்கு ஐக்கியம் உண்டு என்று பவுல் கூறுகிறார். இரண்டாவதாக, மற்ற விசுவாசிகளோடும் நமக்கு ஐக்கியம் வேண்டும். ஆதித் திருச்சபையில் விசுவாசிகள், அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுவதிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள். (அப்போஸ்தலர் 2:42) நாம் ஒருவரையொருவர் தேற்றி பக்திவிருத்தியடையச் செய்யவேண்டுமென்று, பவுல் 1 தெசலோனிக்கேயர் 5:11ல் கூறுகிறார். மேலும் எல்லோரோடும் சமாதானமாயிருக்கும்படி அவர் ரோமர் 12:18ல் கூறுவதை நாம் வாசிக்கலாம். ஒருவர் பாரத்தை ஒருவர் சுமப்பதினால் கிறிஸ்துவின் பிரமாணத்தை நாம் நிறைவேற்றுவதும் அவசியம் என கலாத்தியர் 6:2ல் அவர் கூறுகிறார். இந்த விசுவாச ஐக்கியத்தினால் நாம் ஜெபிக்கக் கற்றுக்கொள்கிறோம்; ஆறுதலைப் பெற்றுக்கொள்கிறோம்; அவர்களது சாட்சியினால் திடப்படுகிறோம்; ஆவியில் பலப்படுகிறோம்; ஆவிக்குரிய வாழ்வில் வளர்ச்சி பெறுகிறோம். நாம் பலன் பெறுவது மாத்திரமல்ல மற்றவர்கள் பலனடைவதற்கும் நாம் உதவியாயிருக்கிறோம்.
அன்பு நண்பர்களே, இந்த அருமையான ஐக்கியத்தை நாம் விட்டுவிடாதிருப்போமாக. ஒரு மனிதனுக்கு பலமும் பயனும் தனிமையாயிருப்பதினால் அல்ல, மற்றவர்களுடன் ஐக்கியம் கொண்டு ஒத்துழைப்பதினால்தான் கிட்டுகிறது என்று ஒருவர் கூறியிருக்கிறார். எனவே, நமக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், சக விசுவாசிகளை சந்திப்போம். இயேசுவைப் போல நாமும், அவர்களை - நேசிப்போம், சேவை செய்வோம், ஆசீர்வதிப்போம், கவனித்துக்கொள்வோம்.
ஜெபம்: பரம தகப்பனே, உம்மோடு ஐக்கியம் கொள்வதினால் நான்அதிகமான பெலனைப் பெற்றுக்கொள்கிறேன். இது எத்தனை சிலாக்கியம்! அதுபோலவே நானும் மற்ற விசுவாசிகளோடு தொடர் ஐக்கியம் கொண்டு, அவர்களைத் திடப்படுத்தி, தேற்றி, ஆசீர்வதிக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments