top of page

செவ்வாய், நவம்பர் 12 || தெளிதேன் துளிகள் ||

வாசிக்க: அப்போஸ்தலர் 13: 6-12


கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்


அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள் ... முடிவு பரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.   - மத்தேயு 24:11,13



பர்யேசு என்பது இயேசுவின் குமாரன் என்று அர்த்தப்படும். எபிரெய கலாச்சாரத்தில், ஒருவரைப் பின்பற்றத் தயாராயிருக்கும் ஒரு நபரை மகன், குமாரன் என்று கூப்பிடும் வழக்கம் இருந்தது. இந்த மனிதன் இயேசுவைப் பின்பற்றுபவன் என்று சொன்னாலும் அவன் இயேசுவின் போதனைக்கு முற்றும் மாறான போதனையில் கற்பிக்கப்பட்டான். அவன் இயேசுவின் மகனோ, இரட்சிப்பைப் பெற்ற மகனோ அல்ல; உண்மையில் அவன் பிசாசின் மகனாய் இருந்தான். எலிமா என்ற மறுபேருடைய பர்யேசு, செர்கியுபவுல் என்ற ரோம அதிகாரிக்குச் சுவிசேஷம் அறிவித்த பவுலையும் பர்னபாவையும் எதிர்த்து நின்றான். செர்கியுபவுலை இரட்சிப்பின் சுவிசேஷத்திலிருந்து திசைதிருப்ப எலிமா பலமுறை முயன்றான். (அப்போஸ்தலர் 13:8) எலிமா பவுல், பர்னபாவை எதிர்த்தபோதும் உண்மையில் அவன் சாத்தானின் தூதனாயிருந்ததால், தேவனின் தூதர்களை, தேவ வார்த்தையை, தேவனையே எதிர்த்து நின்றான்.

அன்பானவர்களே, நாம் வாழ்கின்ற இந்தக் காலம், கள்ளத் தீர்க்கதரிசிகள் மற்றும் மாறுபட்ட சமய வழிபாடுகளின் காலம். இவையனைத்துமே சாத்தானுடைய தூண்டுதல். நரகத்தின் சேனைகள் நேரடியாகவே தேவனுடைய சேனைகளுக்குச் சவால் விடும் காலம் இது! கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அவர்கள் தவறு செய்பவர்கள் மட்டுமல்ல, அவர்கள் ஆபத்தானவர்களும்கூட. எனவே நாம் அவர்களது தவறான பேச்சுக்கு நம் மனதைத் திறந்துவிடக்கூடாது; அவர்கள் புரட்டுக்காரர்கள் என்பதில் சந்தேகமில்லை! சத்தியத்தைப் புரட்டுகிறார்கள், மாற்றிப் பேசுகிறார்கள், கேட்பவர்களது எண்ணங்களைத் திரித்துவிடுகிறார்கள், அவர்கள் ஆத்துமாக்களில் விஷத்தை ஏற்றுகிறார்கள். கள்ளத் தீர்க்கதரிசிகள் ஓநாய்களைக் காட்டிலும் மிவும் கொடியவர்கள், அவர்கள் சரீரத்தை மட்டுமல்ல ஆத்துமாவையும் கொல்லுகிறார்கள். மத்தேயு 7:15ல் இயேசு, கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத் தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள் என்று கூறுகிறார். தாங்கள் தேவன் அனுப்பின தீர்க்கதரிசிகள் என்று கூறி, தேவன் தந்த தீர்க்கதரிசனம் இது என்று பொய்களையே உரைக்கின்றார்கள். எனவே, நாம் கவனமாயிருப்போம். தேவனுடைய வார்த்தையை நாம் பிடித்துக்கொள்வோம்; பொல்லாங்கனாகிய பிசாசு எவனை விழுங்கலாமென்று கெர்ச்சிக்கின்ற சிங்கம்போல சுற்றித் திரிகிறான். விசுவாசத்தில் உறுதியாயிருந்து அவனை எதிர்த்து நிற்போம்.


ஜெபம்: ஆண்டவரே, கள்ளத் தீர்க்கதரிசிகளும் கள்ளப் போதகர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் விழத்தள்ளும்படி ஆட்டுத்தோலைப் போர்த்திய ஓநாய்களாக சுற்றித் திரியும் காலத்தில் நாம் வாழ்கிறோம். சத்தியத்தை அவர்கள் புரட்டி ஜனங்களைத் திரியப்பண்ணுகிறார்கள். நான் ஜாக்கிரதையாயிருந்து உமது வசனத்தைப் பிடித்துக்கொண்டு நடக்க உமது கிருபையைத் தாரும். ஆமென்.

தெளிதேன் துளிகள்

 

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page