top of page

செவ்வாய், டிசம்பர் 31 || தெளிதேன் துளிகள்

வாசிக்க: சங்கீதம் 100: 1-5


என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்


அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிரகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள். - சங்கீதம் 100:4


நன்றியறிதலானது ஒவ்வொரு கிறிஸ்தவ விசுவாசியின் வாழ்நாள் முழுவதிலும் ஊடுருவிச் செல்வது மிக அவசியம். நன்றியறிதலானது ஆலயத்தில் எழுகின்ற தூபம்போல முழு இடத்தையும் சுகந்த வாசனையால் நிரப்புகிறது என்று ஸ்பர்ஜன் கூறுகிறார். நன்றி என்ற வார்த்தைக்கான எபிரெய வார்த்தை - டௌடா! தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்தி, ஆராதனைப் பாடல்களைப் பாடுவது என்பது அந்த வார்த்தையின் அர்த்தம். நம் தேவைகளையே தேவனிடத்தில் நாம் கொண்டுவருகிறோம். நம் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து, நம் பிரச்சனைகளை அவர் தீர்க்கும்படி மன்றாடுகிறோம். சிலவேளைகளில், அவர் செய்தே ஆகவேண்டும் என்ற மனநிலையோடு அவரது பிராகாரங்களில் நாம் நுழைகிறோம். அப்படியின்றி, தேவனுடன் நெருக்கமான ஐக்கியம் கொண்டு, அவரோடு உறவாடவேண்டும் என்கிறான் சங்கீதக்காரன். அவருக்கு நாம் நன்றிசெலுத்தும்போது இருதயம் சந்தோஷத்தால் நிரம்புகிறது. கஷ்டமான நேரங்களில் இப்படி செய்வது மிகவும் கடினம்தான். ஆனால் தேவனுக்கு நன்றிகளை செலுத்துகையில், நம் இருதயங்கள் அவரோடு நெருக்கமாகிறது. 

நமக்குத் தேவன் செய்ததற்காக மட்டுமல்ல, அவர் நமக்கு எல்லாமாக இருப்பதற்காக அவருக்கு நன்றி செலுத்தவேண்டும். தேவன் நமக்கு எத்தனையோ காரியங்களைச் செய்திருக்கிறார் - உண்ண உணவு, தலைக்கு மேல் ஒரு கூரை, குடும்பம், வேலை, இவற்றோடு ஆவிக்குரிய ஆசீர்வாதங்களான - பாவமன்னிப்பு, எழுதப்பட்ட அவரது வார்த்தை, அவருடைய சபை, நமக்குள் வாசம் செய்கின்ற பரிசுத்த ஆவியானவர் - ஆகியவற்றையும் கொடுத்திருக்கிறார். நாம் பாவமன்னிப்புக்கு அருகதையற்ற ஜனம் என்று நினைவுகூருவோம் - நம்மை நரகத்தில் எறிந்திருக்க வேண்டும் - ஆனால் தகுதியற்ற நமக்குத்  தேவனுடைய இரக்கம், அவரது அளவற்ற தயவினால் நாம் கோபாக்கினையிலிருந்து மீட்கப்பட்டோம். எனவே, சங்கீதக்காரனோடு சேர்ந்து நாமும், என்னை நீர் நினைக்கிறதற்கும்,  விசாரிக்கிறதற்கும் நான் எம்மாத்திரம் (சங்கீதம் 8:4) என்கின்ற நமது பிரமிப்பைப் பிரகடனப்படுத்துவோம். அன்பானவர்களே, இந்த வருடத்தின் கடைசி நாளிலே, தாழ்மையோடு நாம் அவரது பிரசன்னத்தில் வந்து, நன்றி நிறைந்த இருதயங்களுடன் அவருக்கு கீர்த்தனம் பாடி, அவரை உயர்த்துவோம். அவருடைய பிராகாரங்களில் துதியோடும் புகழ்ச்சியோடும் பிரவேசிப்போம்.

ஜெபம்:  ஆண்டவரே, இந்த ஆண்டைத் திரும்பிப் பார்க்கையில் என் இருதயம் நன்றியால், மகிழ்ச்சியால் நிரம்புகிறது. நீரே என் தேவன், நான் உமக்குரியவன். நீர் என்னைவிட்டு விலகமாட்டீர். உமது அன்பும் உண்மைத்துவமும் மாறாதவை, நித்தியமானவை. உமது எல்லா கிரியைகளுக்காக, உமக்காக நான் துதியோடும் புகழ்ச்சியோடும் உமது பிரசன்னத்துக்குள் வருகிறேன். ஆமென். 

தெளிதேன் துளிகள்

 

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page