வாசிக்க: மத்தேயு 2: 1-6
கிழக்கிலிருந்து ஞானிகள் வந்து பிள்ளையைத் தொழுதனர்
.. யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்(தனர்), ... - மத்தேயு 2:1
குழந்தை கிறிஸ்துவின் தெய்வீகப் பிறப்பை சாஸ்திரிகள் எப்படியோ அறிந்து, யூதரின் ராஜாவைப் பார்க்கும்படிக்கு எருசலேமுக்கு வந்தார்கள். மேசியா எங்கே பிறப்பார் என்று கூறும் மீகா புத்தகம் அவர்களிடம் இல்லை (மீகா 5:2); எனவே, மேசியா அரண்மனையில் பிறந்திருப்பார் என்று இஸ்ரவேலின் தலைநகர் எருசலேமுக்கு வந்தார்கள். ஞானிகளது நடக்கை, ஆவிக்குரிய விடாமுயற்சிக்கு நல்ல எடுத்துக்காட்டு! தங்களது வீட்டை விட்டு வெகுதூரம் பயணம் பண்ணி இயேசு பிறந்த ஊருக்கு வந்தது பொருட்செலவும் கடினமும் நிறைந்ததாய் இருந்திருக்கும்! அந்நாட்களில் பிரயாணம் என்பது சுலபமல்ல; பல தேசங்கள், பல ஆபத்துக்களைக் கடந்து அவர்கள் வந்திருக்க வேண்டும். ஆனால், இவை எதுவும் அவர்களுக்குத் தடையாய் இருக்கவில்லை. யூதரின் ராஜாவாய்ப் பிறந்திருக்கும் அவரைப் பார்ப்பதற்குத் தங்கள் இருதயங்களை நேராக்கியிருந்தார்கள்; அவரைப் பார்க்கும்வரை அவர்கள் சற்றும் ஓய்வெடுக்கவில்லை. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்ற பழமொழி உண்மை என்று நமக்கு அவர்கள் உறுதியளித்தார்கள்!
ஞானிகள் அவர்களைப் பார்க்காதிருந்தபோதும் அவர் கிறிஸ்து என்று விசுவாசித்தார்கள். அதுமட்டுமல்ல! வேதபாரகர் பரிசேயர் அவரை விசுவாசியாதிருந்தபோதும் அவர்கள் அவரை விசுவாசித்தார்கள். அதுவும் போதாது என்று, அவரை ராஜாவாக பணிந்துகொண்டார்கள். என்ன ஆச்சரியமான விசுவாசம்! நம்புவதற்கு அவர்கள் அற்புதம் ஒன்றையும் காணவில்லை. தெய்வீகமான, உன்னத அடையாளம் ஒன்றும் பார்க்கவில்லை. புதிதாய்ப் பிறந்த, ஆதரவற்ற, பெலவீனமான, நம்மைப்போல் தாயின் பாதுகாப்பிலே இருந்த அந்தப் பச்சிளம் குழந்தையை மட்டும் கண்டார்கள். என்றாலும், குழந்தையைப் பார்த்தவுடன் அவர் உலக இரட்சகர் என்று விசுவாசித்தார்கள்! அன்பர்களே, கிறிஸ்தவர்கள் என்று சொல்பவர்களும் இவர்களைப்போல் நடந்துகொண்டால் எவ்வளவு நலமாயிருக்கும்! கிறிஸ்துவின் சீஷர்களாய் வாழ்வதற்கு நாம் பிரயாசப்படுகிறோமா? அவரைப் பின்பற்ற விடாமுயற்சி எடுக்கிறோமா? நமது நம்பிக்கையின் விலை என்ன? இந்த முக்கிய கேள்விகளை நாம் தீவிரத்துடன் சிந்திக்க வேண்டும்!
ஜெபம்: ஆண்டவரே, உம்மைப் பார்க்காதிருந்தும் ஞானிகள் கொண்டிருந்த விசுவாசத்தைக் கண்டு பிரமித்தேன்! மட்டுமல்ல, அவரை ராஜாவாகத் அவர்கள் தொழுது கொண்டார்கள்! வழியிலே ஆபத்து நிறைந்த நெடுந்தூரப் பயணம் மேற்கொள்ள அஞ்சாதிருந்தார்கள். நானும் விடாமுயற்சியுடன் உம்மைத் தொழுவேன். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
תגובות