வாசிக்க: 1 தீமோத்தேயு 2:1-8
பாரத்தைப் பகிர்ந்துகொள்வது அவசியம்!
துன்மார்க்கருடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது; செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம். - நீதிமொழிகள் 15:8
மற்றவர்கள் நமது ஜெபத்தை எதிர்நோக்கியிருக்கையில் நாங்கள் ஜெபிப்போம் என உறுதி கூறுவது பெரிதல்ல, சொன்னதுபோலவே மறவாமல் அவர்களுக்காக ஜெபிப்பது அவசியம். தங்களுக்கு மிகவும் பாரமாகத் தோன்றும் காரியங்களை நம்மிடம் கூறினால் நாம் நிச்சயம் அவர்களுக்காக ஜெபிப்போம் என அவர்கள் நம்புகிறார்கள். இது நமக்குக் கொடுக்கப்படும் பொறுப்பாகும். அதைத் தட்டிக்கழித்துவிடாமல் பாரத்தோடு நாம் அவர்களுக்காக மன்றாடவேண்டும். இப்படி மற்றவர்களுக்காக மன்றாடி ஜெபித்த அநேக மக்களைக்குறித்து நாம் வேதத்தில் வாசிக்கிறோம். ஆதியாகமம் 20:17,18ல், ஆபிரகாம் வேண்டுதல் செய்தபோது தாம் அடைத்துவைத்திருந்த அபிமலேக்கின் குடும்பத்தாரின் கர்ப்பத்தை கர்த்தர் திறந்ததைக்குறித்து வாசிக்கிறோம். எண்ணாகமம் 12ல், மிரியாம் மோசேயைக்குறித்துத் தவறாய் பேசியதினிமித்தம் அவளுக்குக் கர்த்தர் தந்த தண்டனையாகிய குஷ்டரோகத்தை மோசேயின் ஜெபத்தைக் கேட்டு அவர் நீக்கியதைக்குறித்தும் வாசிக்கிறோம். அதுபோன்றே யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தான் என்றும், கர்த்தர் அவனது வேண்டுதலைக்கேட்டு அவனது நண்பர்களை ஆசீர்வதித்தார் என்றும் வேதம் கூறுகிறது. (யோபு 42:10)
அன்பானவர்களே, தங்களுக்காக ஜெபிக்கும்படி மற்றவர்கள் நம்மிடம் ஜெப விண்ணப்பங்களைக் கூறும்போது அவற்றை நாம் எக்காரணத்தைக் கொண்டும் மறந்துபோகக்கூடாது. அவற்றை ஒரு குறிப்புப் புத்தகத்தில் எழுதி வைத்து ஜெபிக்கவேண்டும். மட்டுமல்ல, நாம் யாருக்காக ஜெபித்தோமோ அவர்களிடம் கர்த்தர் செய்தவற்றை நமக்குத் தெரிவிக்கும்படி கேட்டு, கர்த்தருக்கு மகிமை செலுத்தவேண்டும். கர்த்தர் எப்படி கிரியை செய்கிறார் என்று நாம் அறியும்போது ஜெபம் என்பது எத்தனை வல்லமையுள்ள ஆயுதம் என்று நாம் உணருவோம். எனவே, நாம் ஜெபத்தைப் பற்றி அதிகம் அதிகம் பேசுகிறவர்களாக இருக்கவேண்டாம். அதிகமாக ஜெபிக்கிறவர்களாக மாறி மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருப்போம்.
ஜெபம்: தேவனே, யாக்கோபு 5:16ல், நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது என வாசிக்கிறேன். மற்றவர்கள் பகிர்ந்துகொள்ளும் ஜெபக்குறிப்புகளை, அவர்களது பாரத்தை உணர்ந்து அவர்களுக்காக உம்மிடம் பரிந்துபேச எனக்கு கிருபை தாரும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments