வாசிக்க: 2 இராஜாக்கள் 2:1-14
இயேசுவையே பின்பற்றுங்கள்! பின்வாங்காதீர்கள்!
என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார் (இயேசு)
- மத்தேயு 4:19
இன்றைய வேதப்பகுதியில் தீர்க்கதரிசியான எலியா எங்கு சென்றாலும் எலிசா அவனைப் பின்தொடர்ந்தான் என்று வாசிக்கிறோம். எலியா எலிசாவிடம், கர்த்தர் தன்னை பெத்தேலுக்கு அனுப்புவதால், நீ கில்காலிலே இரு என்று சொன்னபோது, எலிசா, நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தரின் ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான். அதுபோன்றே எலியா எரிகோவுக்குச் சென்றபோதும் எலிசா மறுபடியும், நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தரின் ஜீவனையும் உம்முடைய ஜீவனையும்கொண்டு சொல்லுகிறேன் என்றான். மூன்றாம் முறை அவன் யோர்தானுக்குப் போகும்போதும் எலியா எலிசாவைத் தடைசெய்தபோது அவன் அப்படியே உறுதியாகச் சொல்லிவிட்டான். கடைசியில் எலியா அவனை நோக்கி உனக்கு என்ன வேண்டும் எனக் கேட்டபோது எலிசா, உம்மிடத்திலுள்ள ஆவியின் வரம் எனக்கு இரட்டிப்பாய்க் கிடைக்கும்படி வேண்டுகிறேன் என்று கூறினான். எலிசா உண்மையுள்ளவனாயிருந்தபடியால் தான் கேட்டுக்கொண்டதைப் பெற்றுக்கொண்டான்.
அன்பானவர்களே, எலிசா எலியாவைப் பின்தொடர்ந்ததுபோல, நாமும் எங்கேயும் எப்போதும் கர்த்தருக்கு பின்செல்லவேண்டும். நம் கண்களை அவர்மேல் பதித்துக்கொண்டு அவரை விடாமல் பின்பற்றவேண்டும். அப்படி நாம் செல்கையில் வழியில் வரும் தடைகளை மீறி, அவரை நாம் விடாப்பிடியாய்த் தொடரவேண்டும். நாம் அவரைப் பின்பற்ற வாஞ்சையாய் இருந்தால் அவர் நம்மை அவரது வரங்கள் மற்றும் இதர ஆசீர்வாதங்களால் நிறைப்பார். எலிசா கடைசிவரை நிலைநின்றதால் இரட்டிப்பான வரத்தைப் பெற்றான். பேதுரு, எல்லோரும் உம்மை மறுதலித்தாலும் நான் கடைசிவரை பின்செல்வேன் என்று ஆண்டவரிடம் சொல்லியும் தவறிப்போனான். நாம் எப்படியிருக்கிறோம்? அவரைப் பின்தொடர்வதில், அவருடன் எப்போதும் இருப்பதில் நமக்கு விருப்பமுண்டா? கர்த்தர்தாமே அப்படிப்பட்ட கிருபையைத் தந்தருள்வாராக.
ஜெபம்: ஆண்டவரே, எலியாவின் விடாமுயற்சி என்னை ஆச்சரியப்பட வைக்கிறது. அதனால் அவன் பெற்றுக்கொண்ட இரட்டிப்பான வரம் என்னை அதற்கு ஆசைப்பட வைக்கிறது. உம்மை எப்போதும் விடாமல் பின்தொடர்ந்து உமது கிருபை வரங்களைப் பெற எனக்கு உதவும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments