வாசிக்க: உபாகமம் 31: 7,8,14; யோசுவா 1: 1-3
தேவனை நம்பக் கற்றுக்கொண்ட யோசுவா!
... இதை நினைவுகூரும்பொருட்டு, நீ ஒரு புஸ்தகத்தில் எழுதி, யோசுவாவின் செவிகேட்கும்படி வாசி ... - யாத்திராகமம் 17:14
யோசுவா என்பதற்கு யேகோவா நம் இரட்சிப்பு என்று அர்த்தம். (எண்ணாகமம் 13:16) மோசேயிடமிருந்து அநேக உபயோகமான காரியங்களை யோசுவா கற்றுக்கொண்டு பிற்காலத்தில் இஸ்ரவேலின் ஒப்பற்ற தலைவனாக திகழ்ந்தான். எல்லாவற்றுக்கும் மேலாக, சிறிய காரியமானாலும் பெரிய காரியமானாலும் மோசே கர்த்தரைச் சார்ந்திருந்ததையும், அவரது வார்த்தைக்கு சற்றும் பிசகாமல் கீழ்ப்படிந்ததையும் தன் கண்கூடாகப் பார்த்ததுமட்டுமல்லாமல், மோசேயின் அர்ப்பணிப்பை கர்த்தர் எப்படிக் கனப்படுத்தினார் என்பதையும் அவன் கண்டிருந்ததால் தானும் கர்த்தரை நம்புவதற்கு யோசுவா கற்றுக்கொண்டான்.
எகிப்திலிருந்த காலமெல்லாம் இஸ்ரவேலர் அடிமை வேலையை மட்டுமே செய்துவந்ததால், போரில் பழக்கமில்லாதவர்களாக இருந்தார்கள். இப்போதோ ரெவிதீமில் தங்களைத் தாக்கவந்த அமலேக்கியரோடு போராடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அவர்களோடு யுத்தம் பண்ணு என்று மோசே யோசுவாவுக்குக் கட்டளையிட்டதோடு, நான் மலையுச்சியில் தேவனுடைய கோலை என் கையில் பிடித்துக்கொண்டு நிற்பேன் என்றும் கூறி அவனை உற்சாகப்படுத்தினான். மோசே சொன்னதை யோசுவா சற்றும் தயங்காமல் நிறைவேற்றினான். யாத்திராகமம் 17:10ல், யோசுவா மோசே தனக்குச் சொன்னபடியே செய்து அமலேக்கோடே யுத்தம் பண்ணினான் என்று கூறுகிறது. வசனம் 13, யோசுவா அமலேக்கையும் அவன் ஜனங்களையும் பட்டயக்கருக்கினாலே முறிய அடித்தான் என்று கூறுகிறது. மலையுச்சியில் நடப்பது அவனுக்குத் தெரியாதிருந்தபோதும் தனக்காகவும் ஜனங்களுக்காகவும் மோசே ஜெபித்துக் கொண்டிருப்பதைக் கர்த்தர் கேட்டு தங்களுக்கு வெற்றியைத் தருவார் என்று யோசுவா முழு நிச்சயமாக நம்பினான். அப்படியே அவர்கள் பெற்ற வெற்றி அவனது தன்னம்பிக்கையைப் பெருகச் செய்தபடியால், பின்னாட்களில் மோசே மறைந்தபின்னர் இஸ்ரவேலை அவன் நடத்திய வழிகளிலெல்லாம் நம்பிக்கை மற்றும் கீழ்ப்படிதலை முக்கியப்படுத்தி யோசுவா வெற்றி பெற்றதை நாம் வேதத்தில் வாசிக்கிறாம்.
அன்பானவர்களே, நாமும் நமது ஆவிக்குரிய தகப்பன்மாரிடமிருந்து இப்படிப்பட்ட நற்குணங்களைக் கற்றுக்கொண்டு பிசாசை வென்று வெற்றியுள்ள கிறிஸ்தவ ஜீவியம் செய்வோம்.
ஜெபம்: தேவனே, யோர்தானைக் கடக்க நீர் யோசுவாவிடம் சொன்னபோது, ஏழுமுறை எரிகோவைச் சுற்றிவரச் சொன்னபோது, மோசேயிடம் அவன் கற்றபடியே அவன் உம்மை எந்த கேள்வியும் கேட்காமல் அப்படியே நம்பி கீழ்ப்படிந்தான். அப்படியே செய்ய எனக்கு கிருபை தாரும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments