செவ்வாய், ஏப்ரல் 22 || பயத்தைத் தள்ளி விசுவாசத்துடன் ஜெபியுங்கள்!
- Honey Drops for Every Soul
- 2 days ago
- 1 min read
வாசிக்க: ஆதியாகமம் 32: 6-12
என் சகோதரனாகிய ஏசாவின் கைக்கு என்னைத் தப்புவியும், ... நான் பயந்திருக்கிறேன். - ஆதியாகமம் 32:11
இன்றைய வேதப்பகுதியில் நாம் வாசிக்கும் யாக்கோபின் ஜெபம், தன் விசுவாசத்தில் பலவீனனாயிருந்த ஒரு மனுஷனுடைய ஜெபமாக இருந்தபோதிலும், மிகவும் விசேஷித்த ஜெபங்களில் ஒன்றாயிருக்கிறது. கர்த்தர் ஒரு காரியத்தைச் செய்யக் கட்டளையிடுகையில், அதை செய்துமுடிக்கவேண்டிய கிருபையையும் அவர் அருளுகிறார் என்பதை யாக்கோபு மறந்துபோனான். எனவேதான், தன் சகோதரன் தன்னைக் கொன்றுபோடுவான் என்று அவன் பயந்தான். அவன் ஜெபிக்க ஆரம்பித்தபோது, கடந்த இருபது வருடங்களாக கர்த்தர் தன்னைக் காக்கும்படி தன் வாழ்வில் செய்ததை அவருக்கு ஞாபகப்படுத்தினான். பதான் ஆராமிற்கு வந்தபோது கோலும் கையுமாக வந்தவன், இப்போது செல்வச்சீமானாகத் திரும்பிவருகிறான். அப்படியிருந்தும் இத்தனை ஆண்டுகள் தன்னை நடத்திய தேவாதிதேவன் இப்போது ஏசா தன்னைக் கொல்லவிட்டுவிடுவாரா என்ன என்று விசுவாசிக்க முடியாதவனாகத் திணறினான்.
இரண்டாவதாக, யாக்கோபு தன் ஜெபத்தில், ஏசா தன் குடும்பத்தையும் அழிக்க முயற்சிக்கலாம் என்ற அச்சத்தை அவன் வெளிப்படுத்தினான். யாக்கோபின் வம்சத்திற்கு தேவன் ஒரு மாபெரும் திட்டத்தை வைத்திருக்கிறார், தனது பிள்ளைகள்தான் இஸ்ரவேல் தேசம் உருவாகக் காரணமாக இருக்கப்போகிறார்கள்; அவர்களைக் கொண்டு முழு உலகத்தையும் ஆண்டவர் ஆசீர்வதிக்கப்போகிறார்; உலக இரட்சகரான ஆண்டவர் இயேசுவும் தன் மகன் யூதாவின் வம்சாவளியில்தான் தோன்றப்போகிறார் என்பதே அந்தத் திட்டம் என்பதை அவன் அறிந்திருக்கவில்லை. மூன்றாவதாக, தனது ஜெபத்தில், கர்த்தர் தனக்குக் கொடுத்த வாக்குத்தத்தத்தை ஞாபகப்படுத்தினான். (ஆதியாகமம் 28: 12-15) வேடிக்கை என்னவென்றால் இந்த வாக்குத்தத்தம் கர்த்தரால் கொடுக்கப்பட்டிருந்தும், யாக்கோபு ஏசாவுக்குப் பயந்தான்.
நண்பர்களே, நாம் யாக்கோபைப்போல் பயப்படுகிறவர்களாக, விசுவாசத்தில் குறைவுபட்டவர்களாக இருக்கவேண்டாம். ஆண்டவரை நம்பி சார்ந்துகொண்டு, பயத்தைத் தள்ளி, ஜெபித்து ஜெயம் பெறுவோம். சூழ்நிலைகள் நம்மை ஒருபோதும் ஆள இடம் கொடாதிருப்போம்.
ஜெபம்: ஆண்டவரே, யாக்கோபு உம்மைப்பற்றி நன்கு அறிந்திருந்தும், வாக்குத்தத்தத்தைப் பெற்றிருந்தும், தன் விசுவாசக்குறைவினால் பயப்பட்டான். என் சூழ்நிலைகள் எப்படியிருப்பினும் நான் பயப்படாமல், உம்மை விசுவாசித்து, ஊக்கமாக ஜெபித்து காரியத்தை மேற்கொள்ளக் கிருபை தாரும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments