செவ்வாய், ஏப்ரல் 15 || சத்தியத்தை அறிய காய்பா தவறிவிட்டான்!
- Honey Drops for Every Soul
- Apr 15
- 1 min read
வாசிக்க: யோவான் 11: 45-53
நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் .. ஆணையிட்டுக் கேட்கிறேன். - மத்தேயு 26:63
மரித்த லாசருவை இயேசு உயிர்ப்பித்தார் என்ற செய்தியானது பரம்பியபோது, ஆலோசனைச் சங்கம் கூடிவந்து, சூழ்நிலையை எப்படி கையாளுவது என்று ஆலோசித்தது. இயேசு லாசருவை உயிரோடு எழுப்பினார் என்ற செய்தியை அவர்களால் மறுக்கமுடியாது; ஏனெனில் அவன் மரித்தான்; ஆனால் இப்போது உயிருடன் இருக்கிறான்! வெகு விரைவில் எல்லா ஜனங்களும் இயேசுவை விசுவாசித்து அவரைப் பின்தொடர்வார்கள் என்று அவர்கள் பயப்பட்டனர். அப்போதுதான் காய்பா, ஜனங்களெல்லாரும் கெட்டுப் போகாதபடிக்கு ஒரே மனுஷன் ஜனங்களுக்காக மரிப்பது நமக்கு நலமாயிருக்கும் என்றான். தம்மை விசுவாசிப்பவர்கள் எல்லாருக்கும், இயேசு தமது மரணத்தின்மூலமாய் இரட்சிப்பைக் கொண்டுவருவார் என்கின்ற சத்தியத்தை தனக்குத் தெரியாமலேயே தீர்க்கதரிசனமாகச் சொன்னான்! காய்பா சத்தியத்துக்கு அருகில் வந்தும், அவன் மிக அருகாமையில் வரவில்லை. அவன் பழைய ஏற்பாட்டை நன்றாய் அறிந்த ஒரு சமயத் தலைவன்; எனவே, அது கிறிஸ்துவைச் சுட்டிக்காட்டுவதை அவன் நன்கு அறிந்திருக்கவேண்டும். கிறிஸ்துவிடம் அவனுக்குள்ள வெறுப்பு, அவர் யார் என்று அறியாதபடி அவனது கண்களை மறைத்தது. கிறிஸ்துவை சிலுவையிலறையும்படி அனுப்பினால், தேவ சித்தத்தின்படியே தான் செய்வதாக எண்ணினான். யூதர்களின் சமயத்தலைவர்களில் பிரதானமான அவன், குருடருக்கு வழி காட்டிய குருடனானான்! எத்தனை பரிதாபம்! கர்த்தருக்கு நாம் சேவை செய்யவேண்டும் என்ற வைராக்கியத்தில், நாம் அறியாமலேயே, அவருக்கு எதிராக நாம் செயல்படக்கூடாது.
அன்பானவர்களே, காய்பா செய்த தவற்றை ஒருபோதும் நாம் செய்யமாட்டோம் என்று நினைப்பது தவறு. எருசலேமின் துக்ககரமான ராத்திரியில், அந்த சத்தியமே அவனுக்கு முன்பாக நின்றிருந்தபோதும் காய்பா சத்தியத்தை அறியாதிருந்தான். தேவன்மேல் நமக்கிருக்கின்ற வைராக்கியத்தில், செய்வது இன்னதென்று அறியாமலேயே அவருக்கு எதிராய் நாம் நின்றுவிடக் கூடாது. ஆண்டவருடைய பாதத்தில் வீழ்ந்து, நம் பலவீனத்தை அறிக்கையிட்டு, பரிசுத்த ஆவியினால் வரப்போகின்ற மெய்யான வெளிப்பாட்டுக்காக நாம் ஜெபிக்கவேண்டும்.
ஜெபம்: ஆண்டவரே, காய்பா சரியான கேள்வி கேட்டான், சரியான பதில் வந்தது; அவன் அதை நம்பாதிருந்தது பரிதாபம்! சத்தியத்துக்கு அருகில் வந்தும்கூட காணாதிருந்தான். என் சொல், செயல் உமக்கு எதிராயிருந்தால் மன்னியும். ஆவியானவரே என்னை சோதித்து, கலக ஆவியை வெளிப்படுத்தும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comentários