வாசிக்க: ஏசாயா 54:14-17
கர்த்தர் உங்கள் பக்கம்! அஞ்சாதிருங்கள்!
... ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன். - ஆதியாகமம் 15:1
நாம் பயப்படாமலிருக்க நமக்கு பல காரணங்கள் இருக்கின்றன.
முதலாவது, கர்த்தர் தமது பரிசுத்த ஆவியானவரை நமக்குத் துணையாளராகவும் தேற்றரவாளனாகவும் கொடுத்துள்ளார்.
இரண்டாவதாக, விசுவாசிகளாகிய நாம் கிருபையின் உடன்படிக்கையின் கீழ் இருக்கிறோம். இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினால் நாம் மீட்டுக்கொள்ளப்பட்டவர்களாயிருப்பதால் நமது பரம தகப்பனோடு நமக்குள்ள உறவு அதிக நெருக்கமாகிறது. இந்த நெருக்கமே நமக்கு சமாதானத்தையும் பாதுகாப்பையும் கொண்டுவருகிறது. எனவே, நாம் பயப்பட அவசியமில்லை. மூன்றாவது, கர்த்தர் நம்மோடுகூடவே இருப்பதால் நாம் பயத்துக்கு நீங்கலாகிறோம். ஏசாயா 41:10ல், பயப்படாதே, நான் உன்னோடே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன் என்று கர்த்தர் கூறியிருக்கிறார். அவர் நமக்கு மிகவும் அருகாமையில் நின்று, நம் வலது கையைப் பிடித்துக்கொண்டு நமக்கு ஒத்தாசை செய்ய உதவிக்கரம் நீட்டுகிறார்.
நான்காவதாக, நமக்கு வாக்குக் கொடுத்திருக்கும் தேவன் நம் சிருஷ்டிகராயிருக்கிறார். எனவே, நாம் பயப்படத் தேவையில்லை. நம்மைத் தாயின் கருவில் உருவாக்கினவர் அவரே! அன்றைய தினத்திலிருந்து இன்றுவரை நம்மைக் காத்தும் வருகிறார். அவர் எப்படி நம்மைக் கைவிடுவார்? அப்படியிருக்கையில் நாம் எதற்காக பயப்படவேண்டும்? ஏசாயா 46:4ல், ... நரைவயதுமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்து வந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் என்று அவர் வாக்குக் கொடுத்திருக்கிறாரே! அவர் வாக்கு மாறாதவர் அல்லவா!
எனவே, அன்பானவர்களே, நாம் பயத்தை விட்டொழிப்போம்! பரமன் துணை என்றும் நமக்குண்டு என்று நம்புவோம். நம் இரட்சகரும் மீட்பருமானவர் நம் அருகில் நிற்கிறார். நம்மைப் பலப்படுத்தி நமக்கு சகாயம் செய்கிறார். எனவே, பயப்படாமல் தைரியமாக நாம் முன்னேறிச் செல்வோம்.
ஜெபம்: பரம தகப்பனே, இம்மட்டும் காத்த எபினேசர் நீர்; இனியும் என்னைக் காக்க இம்மானுவேலராய் என்னோடிருக்கிறீர். உமது கரம் என்னைத் தாங்கும்; ஏந்தும்; தப்புவிக்கும் என நம்பி உம்மையே சார்ந்துகொண்டிருக்கிறேன். நீர் என்னை வெட்கப்படுத்தமாட்டீர் என உறுதியாயிருக்கிறேன். நன்றி. ஆமென்.
அன்பானவர்களே
இந்த மாதம் நம் சங்கிலித்தொடர் ஜெபம் நடைபெறும். அது அக்டோபர் 28ம் தேதி திங்கள் மதியம் 12 மணிக்கு தொடங்கி அக்டோபர் 29ம் தேதி செவ்வாய் மதியம் 12 மணியில் முடிகிறது. நம் இருதயங்களை ஜெபத்தில் ஒன்றாக இணைத்து, இந்த ஊழியத்துக்காகவும், நமது தேசத்துக்காவும் மற்ற பல காரியங்களுக்காகவும் ஜெபிப்போமாக. உங்கள் பெயர்களை வாட்ஸ் ஆப் மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ எங்களுக்குத் தெரிவிக்கலாம். நீங்கள் எந்த அரை மணி நேரத்தை ஜெபத்திற்கு தெரிந்து கொண்டீர்கள் என்பதையும் தெரிவிக்கவும். நன்றி.
அலுவலக தொடர்பு எண் - 9444456177.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
கிறிஸ்துவின் பணியில் உங்கள் அன்பான,
சகோ. சாமுவேல் பிரேம்ராஜ், சகோதரி மஞ்சுளா பிரேம்ராஜ்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments