ஊழியம் முதலாவது வீட்டில்தான் துவங்குகிறது!
மனுஷகுமாரனும் ... ஊழியஞ்செய்யவும், ... தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார். - மாற்கு 10:45
ஊழியங்கொள்வதல்ல, ஊழியஞ்செய்வதே ஒருவனைப் பெரியவனாக்குகிறது என்று ஆண்டவர் இயேசு சொன்னார். இந்த ஊழியமானது முதலாவது நமது வீட்டில்தான் துவங்குகிறது. சிலர் தங்களது சபைக்கு மற்றும் சபைத்தலைவர்களுக்கு எந்த உதவியையும் செய்யத் தயாராயிருப்பார்கள்; ஆனால் வீட்டில் எந்த உதவியையும் அவர்கள் செய்வதில்லை. சபையில் பாயைப்போடுவதும், ஒட்டடை அடிப்பதும், நாற்காலிகளைத் துடைப்பதும் என்று பல வேலைகளை அவர்கள் ஓடியாடி செய்வார்கள். ஆனால், வீட்டிலே ஒரு துரும்பையும் நகர்த்தமாட்டார்கள். வேறு சிலர் கிராமம் கிராமமாகச் சென்று சுவிசேஷ ஊழியத்தைச் செய்வார்கள். தங்கள் வீடுகளில் இருக்கும் இரட்சிக்கப்படாத உறவினர்களுக்கோ ஒருமுறைகூட சுவிசேஷம் சொல்வதில்லை. இப்படி எழுதுவதினால், மற்றவர்களுக்கு ஊழியம் செய்யக்கூடாது என்று அர்த்தமல்ல. நமது குடும்பத்தின் மக்களுக்கும் அதேவிதமான தாழ்மையோடும், உற்சாகத்தோடும், அர்ப்பணிப்போடும் ஊழியம் செய்யவேண்டும் என்பதே இதன் கருத்தாகும். என்ன இருந்தாலும் நமக்கு அவர்கள் உறவினர்கள்; அவர்களுக்கும் நம் சேவை தேவைப்படுகிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
ஒரு பிசாசு பிடித்த மனிதனிடமிருந்து இயேசு அநேகம் பிசாசுகளைத் துரத்தியிருந்தார். அவன் விடுதலையாக்கப்பட்டவுடன் இயேசுவைப் பின்பற்றிச் செல்ல விரும்பினான். ஆனால், ஆண்டவர் அவனிடம், நீ உன் இனத்தாரிடத்தில் உன் வீட்டிற்குப்போய், கர்த்தர் உனக்கு இரங்கி, உனக்குச் செய்தவைகளையெல்லாம் அவர்களுக்கு அறிவியென்று சொன்னார். அவனும் அந்தப்படியே போய் பிரசித்தம் செய்தான். (மாற்கு 5) எனவே, நாமும் நாம் பெற்ற ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை ஊருக்குச் சொல்வதற்கு முன்னால் வீட்டிலுள்ளவர்களுக்குச் சொல்லவேண்டும். அவர்களுக்கு அன்போடுகூட ஊழியம் செய்யவேண்டும்.
அன்பானவர்களே, நாமும் இப்படி ஒருவரையொருவர் நேசித்து ஒருவருக்கொருவர் ஊழியம் செய்யும்போது நமது உறவும் பெலப்படும் என்பது நிச்சயம்.
ஜெபம்: தேவனே, பரிசுத்தவான்களுக்கும், ஊழியர்களுக்கும் உதவிக்கரம் நீட்டுவதோடு நிறுத்திக்கொள்ளாமல், அதே தாழ்மையோடும், அன்போடும் எனது உறவினர்களுக்கும் உதவி செய்து உமது அன்பை வெளிப்படுத்த எனக்கு கிருபை தாரும். என் வீட்டாரையும் இயேசுவிடம் நடத்த கிருபை தாரும். ஆமென்.
அன்பானவர்களே
இந்த மாதம் நம் சங்கிலித்தொடர் ஜெபம் நடைபெறும். அது அக்டோபர் 28ம் தேதி திங்கள் மதியம் 12 மணிக்கு தொடங்கி அக்டோபர் 29ம் தேதி செவ்வாய் மதியம் 12 மணியில் முடிகிறது. நம் இருதயங்களை ஜெபத்தில் ஒன்றாக இணைத்து, இந்த ஊழியத்துக்காகவும், நமது தேசத்துக்காவும் மற்ற பல காரியங்களுக்காகவும் ஜெபிப்போமாக. உங்கள் பெயர்களை வாட்ஸ் ஆப் மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ எங்களுக்குத் தெரிவிக்கலாம். நீங்கள் எந்த அரை மணி நேரத்தை ஜெபத்திற்கு தெரிந்து கொண்டீர்கள் என்பதையும் தெரிவிக்கவும். உங்களுக்கு ஜெபக்குறிப்புகள் அனுப்பி வைக்கப்படும். நன்றி . அலுவலக தொடர்பு எண் - 9444456177.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
கிறிஸ்துவின் பணியில் உங்கள் அன்பான,
சகோ. சாமுவேல் பிரேம்ராஜ், சகோதரி மஞ்சுளா பிரேம்ராஜ்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments